முதலில் ஒரு சுனாமியின் வெறியை கண்டோம்
பிறகு மாபெரும் புயலின் வலிமையை கண்டோம்
நிலநடுக்கத்தின் விளைவோ அன்று கண்ட துன்பம்
எல்நீனோவின் பலனோ இன்று புயல்களின் வேகம்
மழை பெய்து ஓடிய வெள்ளம் இடுப்பளவு
ஏரிகளைத் திறந்து ஓடிய வெள்ளமோ நெஞ்சளவு
மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாய் மாறியுள்ளான்
நெருப்பும் விவசாயமும் கண்டுபிடித்தான்
போக்குவரத்தும் மருத்துவமும் பின்னே வந்தன
முன்னேற்றம் என்று தொழில்மயமாக்கினான்
அத்தியாவசியங்கள் நிறைவேற ஆடமபரத்தை நாடினான்
நன்மையும் தீமையும் பின்னே வந்தன
அவன் செல்வத்தை மதித்தான்
இயற்கையை மறந்தான்
அவன் பதவியை மதித்தான்
சுற்றுபுறத்தை மறந்தான்
அவன் வளர்ச்சியை மதித்தான்
வானிலையை மறந்தான்
வெவ்வேறு கிரகங்களை நோக்கி பறந்தான்
தான் வசிக்கும் கிரகத்தை மறந்தான்
அன்று வந்த சுனாமி எச்சரிக்கை அளித்தது
பின்பு வந்த வெள்ளம் விழிப்புணர்வை உருவாக்கியதா
சிறுவனுக்கு பெற்றோர் என்ன உறவோ
மனிதனுக்கு இயற்கை அன்னை அந்த உறவே
பெற்றோர்கள் அன்பாக சொன்னாலே சிறுவன் கேட்பான்
இயற்கை அன்னை கடுமையாக எச்சரித்தால் மனிதன் ஏன் மறுக்கிறான்
அவனிடம்…
தொழில்நுட்பத்தால் அறிவு சக்தி உள்ளது
பாதிப்பினால் ஒற்றுமை நீடிக்கிறது
இழப்பினால் மனிதாபிமானம் கூடுகிறது
நின்று நிதானித்து சிந்தித்து பார்ப்போம்
திட்டமிட்டு வேகமாக செயல்படுவோம்
இயற்கையை காப்பாற்றுவோம்
இல்லையெனில்…
நாகரிகம் வளர்ந்ததற்கு பயன் இல்லை
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மதிப்பில்லை
பின் வரும் தலைமுறைகளுக்கு வாழ்க்கை இல்லை
எனவே சிந்திப்போம், செயல்படுவோம்!